கிளிஞ்சல் பூரி

தேவையானவை:

  • மைதா  2 கப் (1+1), கோக்கோ பவுடர்  ஒரு டீஸ்பூன்,
  • டிரிங்கிங் சாக்லேட் பவுடர் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்)  ஒரு டீஸ்பூன்,
  • பொடித்த சர்க்கரை  5 டீஸ்பூன்,
  • நெய்  3 டேபிள்ஸ்பூன்,
  • அரிசி மாவு  2 டேபிள்ஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவையான அளவு.

செய்முறை: மைதாவை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, இரண்டிலும் தலா ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கலக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை சூடாக்கி, இரண்டு பகுதிகளிலும் சேர்த்துக் கலந்து வைக்கவும். பிறகு, ஒரு பகுதி மாவில் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வைக்கவும். இன்னொரு பகுதி மாவில், டிரிங்கிங் சாக்லேட், கோக்கோ, சர்க்கரைப் பொடி கலந்து பிசைந்து வைக்கவும். பிறகு, வெள்ளை மைதா மாவை (தண்ணீர் மட்டும் சேர்த்துப் பிசைந்தது) அப்படியே ஒரே பூரியாகப் திரட்டவும். அதன் மேல் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யைத் தடவிப் பரத்திவிட்டு, அரிசி மாவைத் தூவவும்.

அதன் பின்னர், கோக்கோ பவுடர் கலந்த மாவை ஒரே பூரியாகத் தேய்த்து, அரிசி மாவு தூவப்பட்ட முதல் பூரி மேல் வைக்கவும். அதன் மேலும் நெய் தடவி, அரிசி மாவைத் தூவிக்கொள்ளவும். இப்போது, ஒன்றன் மேல் ஒன்றாக இருக்கும் இரண்டு பூரிகளையும் ஒன்றாகச் சேர்த்து சுருட்டவும் (பாய் சுருட்டுவது போல). இது, குழாய் போன்ற வடிவில் இருக்கும். இதை சிறு சிறு துண்டுகளாக (வட்ட வடிவ) நறுக்கி, அவற்றைப் பூரி களாகத் தேய்க்கவும். எண்ணெயைக் காய வைத்து, மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரைப் பொடி தூவிப் பரிமாறவும்.

வெள்ளையும் சாக்லேட் கலரும் கலந்து, அழகிய கிளிஞ்சல் தோற்றத்தில் கண்ணைப் பறிக்கும் இந்த பூரி, சுவையில் நாவையும் கட்டிப்போடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X