பருப்பு தோசை

தேவையானவை:

  • துவரம்பருப்பு கால் கப்,
  • கடலைப்பருப்பு கால் கப்,
  • உளுத்தம்பருப்பு கால் கப்,
  • பாசிப்பருப்பு கால் கப்,
  • பச்சரிசி அரை கப்,
  • சின்ன வெங்காயம் 12,
  • கறிவேப்பிலை சிறிது,
  • காய்ந்த மிளகாய் 6,
  • தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்,
  • சோம்பு ஒரு டீஸ்பூன்,
  • உப்பு தேவையான அளவு,
  • எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், மற்ற பொருட்களுடன் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தோசைகளாக வார்த்தெடுங்கள். எண்ணெய் ஊற்றிச் சிவக்க வேகவிட்டெடுத்துப் பரிமாறுங்கள்.

வெங்காயத்தையும் சேர்த்து அரைப்பதால் வித்தியாசமான சுவை தரும் இந்த தோசை.

வாழைப்பூ பருப்பு உசிலி தேவையானவை: துவரம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப், வாழைப்பூ பாதி, உப்பு தேவையான அளவு. அரைக்க: சின்ன வெங்காயம் 8, காய்ந்த மிளகாய் 6, சோம்பு ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு 1 டீஸ்பூன், எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறவையுங்கள். வாழைப்பூவை தட்டி பிழிந்தெடுங்கள் (அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியும் பிழியலாம்). அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து, அத்துடன் பருப்புகளையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, அரைத்த விழுது, வாழைப்பூ, உப்பு சேர்த்து, உதிராக வரும்வரை நன்கு சுருள கிளறி இறக்குங்கள்.