தேவையானவை:
- பஜ்ஜி மிளகாய் 6,
- கடலை மாவு முக்கால் கப்,
- மிளகாய் தூள் அரை டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- ஆப்ப சோடா அரை சிட்டிகை,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
பூரணத்துக்கு:
- கடலை மாவு அரை கப்,
- மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
- சிட்ரிக் ஆசிட் அரை டீஸ்பூன் (அல்லது) எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன்,
- கரம் மசாலா தூள் 1 சிட்டிகை,
- சீரகத்தூள் 1 டீஸ்பூன்,
- எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப.
செய்முறை: முதலில் பூரணம் தயாரித்துக் கொள்ளவேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, குறைந்த தீயில் கடலை மாவை வறுத்துக்கொள்ளுங்கள். நிறம் மாறி வாசனை வந்ததும் இறக்கி ஆறவிட்டு, அதனுடன் பூரணத்துக்கான மற்ற பொருட்களையும் ஒன்றாகக் கலந்து ஆறவிடுங்கள்.
மிளகாய்களை சுத்தம் செய்து, லேசாக நீளவாக்கில் கீறி, உள்ளே இருக்கும் விதைகளை கவனமாக நீக்குங்கள். அதனுள், கடலை மாவு பூரணத்தை நன்கு நிரப்புங்கள். பிறகு, பஜ்ஜிக்கான கடலை மாவு, ஆப்ப சோடா, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, பூரணம் நிரப்பப்பட்ட மிளகாய்களை மாவில் நனைத்தெடுத்து, எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டெடுங்கள்.