தேவையானவை: பெரிய வெங்காயம் – 2, பூண்டு – 10 பல், தக்காளி – 4, சிறிய கத்தரிக்காய் – 10, புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. அரைக்க: தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 4, கசகசா – 2 டீஸ்பூன், சோம்பு – கால் டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், பூண்டு – 2 பல். தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – கால் கப்.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். பூண்டைத் தோலுரித்துக்கொள்ளுங்கள். கத்தரிக்காயை காம்பு நறுக்கி, கீறிக் கொள்ளுங்கள். புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பொன்னிறமானதும் வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்குங்கள். பின்னர் தக்காளி, கத்தரிக்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்குங்கள். கத்தரிக்காய் நன்கு வதங்கும்பொழுது தனியாதூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, மிளகாய்தூள் சேருங்கள். இது பச்சை வாசனை போக வதங்கிய பிறகு, புளித்தண்ணீர் சேர்த்து, அதுவும் கொதித்த பின் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக நன்கு அரைத்து சேருங்கள். 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.