தேவையானவை: துவரம்பருப்பு – அரை கப், குழம்புக்கு போடும் ஏதேனும் காய் – 100 கிராம், பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன். டீஸ்பூன், பெருங்காயம் – அரை
செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து, குழைய வேகவைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளி, காய் ஆகியவற்றை நறுக்குங்கள். 2 கப் தண்ணீரை கொதிக்கவைத்து, அதில் நறுக்கிய அனைத்தையும் சேர்த்து வேகவிடுங்கள். காய் வெந்ததும் புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து, அதனுடன் சேருங்கள். அத்துடன் சாம்பார் பொடி, உப்பு சேருங்கள். இது பச்சை வாசனை போகக் கொதித்ததும், வேகவைத்த பருப்பை, அதன் மேல் நிற்கும் தண்ணீரை வடித்துவிட்டு (வடித்த தண்ணீரை ரசத்துக்கு பயன்படுத்தலாம்) கரைத்து சேருங்கள். நன்கு கொதிக்கும்போது, எண்ணெயைக் காயவைத்து, தாளித்துக் கொட்டி இறக்குங்கள்.
குறிப்பு: இந்த சாம்பார் தண்ணியாக, நீர்த்தாற்போல் இருந்தால்தான் சுவை. குழைவான சாதத்துக்கு அருமையாக இருக்கும். சாம்பார் கெட்டியாக இருந்தால், பருப்புத்தண்ணீரை சேருங்கள்.