சோயா கைமா குழம்பு

தேவையானவை: சோயா உருண்டைகள் – 20, பச்சைப் பட்டாணி (விருப்பப்பட்டால்) – கால் கப், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. தாளிக்க: பட்டை – ஒரு துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், எண்ணெய் – கால் கப். அரைக்க: தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 6 பல், சோம்பு – அரை டீஸ்பூன், மிளகாய்தூள் – இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் – ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு – 6.

செய்முறை: சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு, பிறகு பச்சை தண்ணீரில் போட்டு 2 முறை அலசிப் பிழிந்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அல்லது மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்றுச் சுற்றி எடுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து, பட்டை, சோம்பு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சிறிது வதங்கியதும், சோயாவை அதனுடன் சேர்த்து, 5 நிமிடம் வதக்கி அதில் அரைத்த விழுது, தக்காளி சேர்த்து (பட்டாணி சேர்ப்பதானால், அதையும் இப்போது போட்டு) பச்சை வாசனை போக வதக்குங்கள். தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து, சற்று தளதளவென இருக்கும்போது இறக்கி, மல்லித்தழை, கறிவேப்பிலை சேருங்கள். சாதம், இட்லி, இடியாப்பம், சப்பாத்தி எல்லாவற்றுக்கும் ஈடுகொடுக்கும் இந்தக் கைமா குழம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *