தேவையானவை: (மேல் மாவுக்கு) பச்சரிசி ஒரு கப், உப்பு தேவையான அளவு.
பூரணத்துக்கு: உளுத்தம்பருப்பு கால் கப், துவரம்பருப்பு கால் கப், பச்சை மிளகாய் 3, இஞ்சி ஒரு துண்டு, சீரகம் கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரிசியை ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து, வீட்டுக்குள்ளேயே நிழல் உலர்த்தலாக உலர்த்தி, சற்று ஈரம் இருக்கும் போது மிக்ஸியில் அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பையும், துவரம்பருப்பையும் ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், தேங்காய் துருவலோடு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். இதை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவிடுங்கள். வெந்ததும் எடுத்து ஆறவிடுங்கள். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெந்ததை உதிர்த்து சேர்த்து கிளறுங்கள். அத்துடன் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கலந்து இறக்குங்கள்.
பச்சரிசி மாவை அளந்துகொண்டு சம அளவு தண்ணீர் எடுத்து (ஒரு கப் மாவு ஒரு கப் தண்ணீர்) கொதிக்கவிடுங்கள். சிறிது உப்பு சேருங்கள். தண்ணீர் கொதிக்கும்பொழுது மாவைச் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். சிறிது மாவெடுத்து கிண்ணம் போல் செய்து, பருப்பு பூரணத்தை உள்ளே வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுத்து, சுடச்சுடப் பரிமாறுங்கள்.