பிஞ்சு கத்திரி ரசம்

தேவையானவை:

  • புளி  எலுமிச்சம்பழ அளவு,
  • உப்பு  ஒரு டீஸ்பூன்,
  • துவரம்பருப்பு  கால் கப்,
  • மஞ்சள்தூள்  கால் டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • சிறிய பிஞ்சு கத்திரிக்காய்  10.

ரசப்பொடிக்கு:

  • தனியா  3 டீஸ்பூன்,
  • துவரம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • மிளகு  ஒரு டீஸ்பூன்,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • சிவப்பு மிளகாய்  3.

தாளிக்க: நெய்  கால் டீஸ்பூன், கடுகு  கால் டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை: பொடிக்க வேண்டியவற்றை பச்சையாக, சற்று கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பெருங்காயத்தூளையும் சேர்க்கவும். கொதிவர ஆரம்பித்த உடனேயே கத்திரிக்காயை காம்பை எடுத்து நடுவில் ‘கூட்டல் குறி’ வடிவத்தில் நறுக்கி புளி நீரில் போடவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் ரசப்பொடியை போடவும். பிறகு பருப்பை சேர்க்கவும். கடைசியாக இறக்கி கடுகு, கொத்துமல்லி, கறிவேப்பிலை தாளிக்கவும்.’