தேவையானவை:
- பாசிப்பருப்பு ஒன்றரை கப்,
- இஞ்சி 50 கிராம்,
- மல்லித்தழை சிறிதளவு,
- பொடியாக நறுக்கிய காய்கறிகள் (காலிஃப்ளவர், கேரட், சிகப்பு முள்ளங்கி, பூசணி, பட்டாணி எல்லாம் சேர்த்து) ஒரு கப்,
- எலுமிச்சம்பழச் சாறு 2 டீஸ்பூன்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்,
- பச்சை மிளகாய் 3,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்.
செய்முறை: பச்சை மிளகாய், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். இஞ்சியைத் தோல் சீவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். ஒரு கடாயில் பாசிப்பருப்பை வாசனை வரும்வரை வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். (எவ்வளவு தளர்த்தியாக பருப்பு வேண்டுமோ, அந்த அளவு நீரை கொதிக்க விடவும்). பெரிய பிரஷர் பான் அல்லது கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம் போட்டு வெடித்ததும், இஞ்சி விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 2 நிமிடம் கழித்து நறுக்கிய காய்கறிகள் + பெருங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். அதோடு வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்கும் நீரை விட்டு, மூடியால் மூடி 40 நிமிடம் வேக விடவும். நடு நடுவே கிளறிவிடவும். (தீயைக் குறைவாக வைக்கவும்). இப்பொழுது பருப்பும் காய்கறியும் சேர்ந்து வெந்திருக்கும். எலுமிச்சம்பழச் சாறை சேர்க்கவும். பாஸ்மதி அரிசி சாதத்துடன் சாப்பிட, சத்தான பருப்பு மசியல் ரெடி.