தேவையானவை: மொச்சை – அரை கப், சின்ன வெங்காயம் – அரை கப், பூண்டு – அரை கப், புளி – எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் – 3 டீஸ்பூன், தனியாதூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், எண்ணெய் – கால் கப். தட்டிக் கொள்ள: மல்லித்தழை, கறிவேப்பிலை – தலா சிறிதளவு, தக்காளி – 4
செய்முறை: மொச்சையை 6 முதல் 8 மணிநேரம் ஊறவிடுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து வையுங்கள். புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். தக்காளி, மல்லித்தழை, கறிவேப்பிலை மூன்றையும் அம்மியில் வைத்துத் தட்டிக்கொள்ளுங்கள். மொச்சையை உப்பு சேர்த்து நன்கு வேகவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வெங்காயம், பூண்டு சேருங்கள். இது நன்கு வதங்கியதும் தட்டியதை சேர்த்து, மேலும் சிறிதுநேரம் வதக்கி மிளகாய்தூள், தனியாதூள், சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி புளி, உப்பு, மொச்சை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்குங்கள். நாவைச் சப்புக்கொட்ட வைக்கும் இதன் அபார ருசி.